அரசு அலுவலர்களின் நேர்மையை உறுதிப்படுத்தி, இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொதுச் சேவையொன்றை இலங்கையில் உருவாக்குவதற்கு அரசாங்கம் முதன்மையான கவனத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் அரச துறையில் ஊழலை ஒழிக்கும் செயற்திட்டத்தின் ஒரு பிரதான முயற்சியாக அரச துறை முழுவதும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மையைப் பேணும் கலாச்சாரமொன்றை உருவாக்கி, அரசாங்கத்தின் சேவைகளை அனைத்துக் குடிமக்களுக்கும் பயனுள்ள முறையில் வழங்குவதற்காக அனைத்து அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit - IAU) நிறுவப்பட்டுள்ளது.
உள்ளக அலுவல்கள் அலகின் பிரதான நோக்கங்கள்
- நிறுவனத்தினுள் ஊழலைத் தடுத்தல் மற்றும் நேர்மையான கலாச்சாரமொன்றை வளர்த்தெடுத்தல்.
- நிறுவனத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் மற்றும் நிறுவனச் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துதல்.
- நிறுவனத்தினுள் ஒழுக்கநெறி சார்ந்த நிர்வாகத்தை ஊக்குவித்தல்.
- துஷ்பிரயோகங்களைப் புகாரளிப்பதை ஊக்குவித்தல், தகவல்களை வெளிப்படுத்துவோரைப் பாதுகாத்தல் மற்றும் இரகசியத் தன்மையைப் பேணுவதற்காகப் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.
உள்ளக அலுவல்கள் அலகின் பொறுப்புகளும் முறைப்பாடுகளும்
- நிறுவனத்தினுள் காணப்படும் முறைமை சார்ந்த தடைகளைக் (Systemic bottlenecks) கண்டறிவதற்காகத் தற்போதைய நடைமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளைப் பரிசீலித்தல் மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்காக அவற்றை இலகுபடுத்துதல்.
- ஊழல் அபாய மதிப்பீடுகளை (Corruption Risk Assessment) மேற்கொள்வதன் மூலம் நிறுவனத்தினுள் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தைகளுக்கு ஆளாகக்கூடிய துறைகளைக் கண்டறிதல் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.
- நிறுவனத்தின் தேவைகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும் உத்திகளை உள்ளடக்கிய நிறுவன நேர்மைச் செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துதல்.
- தேசிய ஊழல் எதிர்ப்புச் செயற்பாட்டுத் திட்டத்துடன் நிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒருங்கிணைத்து, தேசிய ஊழல் எதிர்ப்பு உத்திகளுக்கு இணங்குதல்.
- 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் உட்பட தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுடன் நிறுவனத்தின் இணக்கப்பாட்டை மதிப்பீடு செய்வதற்காக இணக்கப்பாட்டு மீளாய்வுகளை (Compliance Assessments) மேற்கொள்வதுடன், மேம்படுத்தப்பட வேண்டிய துறைகளைக் கண்டறிதல்.
- அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சொத்து அறிவித்தல் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் கட்டளைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைவாக நலன்முரண்பாடுகளை (Conflicts of Interest) மேலாண்மை செய்தல்.
- நிறுவனத்தினுள் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் மேலாண்மை செய்வதற்கும் பாதுகாப்பான அமைப்பொன்றை நிறுவுதல், அத்தகைய அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய அலுவலர்கள் அல்லது அலகுகளால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, விசாரணைகளை மேற்கொள்ளும் உரிய தரப்பினருக்குத் தொடர்ச்சியான புதுப்பிப்புகளை வழங்குதல்.
- தேவைக்கேற்ப, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்வதற்கான உரிய விடயங்கள், கண்டறிதல்கள் அல்லது தகவல்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தல்.
- நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளை விவரிக்கும் பிரஜைகள் பட்டயமொன்றை (Citizen Charter) உருவாக்கி வெளியிடுதல்.
- அரசு அலுவலர்களால் பின்பற்றப்பட வேண்டிய தரப்படுத்தப்பட்ட ஒழுக்கநெறிக் கோவை உட்பட, ஒழுக்கநெறி சார்ந்த நிர்வாகத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை நிறுவுதலும் வலுப்படுத்துதலும்.
- ஊழல் எதிர்ப்பக் கோட்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதற்கான ஊக்கமளிப்பாகப் பணியாளர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் விழிப்புணர்வூட்டுதல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை எடுத்தல்.
- இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்புச் சட்டகத்தினால் வழிநடத்தப்படும் நேர்மை மதிப்பீட்டுச் செயற்பாடுகளில் நிறுவனம் பங்கேற்பதையும் அதனுடன் இணங்கிச் செல்வதையும் உறுதிசெய்து, தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டிற்கான (National Anti-Corruption Integrity Assessment) நிறுவன மையப்புள்ளியாகச் (Focal Point) தொழிற்படுதல்.
- அலகின் கடமைகளை நடைமுறைப்படுத்தும்போது தொடர்ச்சியான வழிகாட்டல்கள் மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுதல்.
- உள்ளக அலுவல்கள் அலகின் செயற்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளைச் சுருக்கமாக உள்ளடக்கி காலமுறை மற்றும் ஆண்டறிக்கைகளைத் தயாரித்தல்.
- தனியார் துறைப் பங்காளர்களின் பங்கேற்புடன் நேர்மையை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களைத் தயாரித்தலும் நடைமுறைப்படுத்துதலும்.
மத்திய மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தின் உள்ளக அலுவல்கள் அலகின் உறுப்பினர்கள்
உள்ளக அலுவல்கள் அலகின் தலைவர்
திருமதி சுஜானி ஆர். விஜேதுங்க - பிரதிப் பிரதான செயலாளர் (நிர்வாகம்)
உறுப்பினர்கள்
1. திருமதி கே.ஏ.டீ. ஆரியவன்ச - பிரதான பொறியியலாளர் (தொழில்நுட்பம்)
2. திரு. டீ.எம்.எல்.கே. தசநாயக்க - பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
3. திருமதி கே.ஏ.என். தமயந்தி - பணிப்பாளர் (நிதி)
4. திருமதி டீ.பீ. தெஹிகொல்ல - பணிப்பாளர் (முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி அலகு)
5. திருமதி ஏ.ஜே. கருணாரத்ன - சட்ட உத்தியோகத்தர்
6. திருமதி கே.ஏ.எம்.எம். குணதிலக்க - பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
7. திரு. டீ.எம்.கே. ரத்னாயக்க - உதவிப் பிரதான செயலாளர் (நிர்வாகம்)
8. திருமதி சந்திரிக்கா தசநாயக்க - நிர்வாக உத்தியோகத்தர்
மத்திய மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் மூலமாகவோ அல்லது மத்திய மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பிலோ இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடு ஏதேனும் இருப்பின், பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மத்திய மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தின் உள்ளக அலுவல்கள் அலகிற்கு உங்களது முறைப்பாட்டை அனுப்பி வைக்க முடியும்.
